தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பின் கீழ் கட்டாயப் பாதுகாப்புக்கான மாதச் சம்பள உச்சவரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இப் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம், நாடு முழுவதும் கூடுதலாக 51 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் கட்டாயப் பி.எஃப். (PF) வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுப் பயன்பெறுவார்கள்.
கடந்த 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் பி.எஃப். மாதச் சம்பள வரம்பில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படாத நிலையில், 2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் இது ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது.
தற்போது நிலவும் ஊதிய உயர்வு, வருமான அதிகரிப்பு மற்றும் முறைசார் வேலைவாய்ப்புகளின் விரிவாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தொகை ரூ.25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை மாதத்திற்கு ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறும் புதிய ஊழியர்கள் பி.எஃப். திட்டத்தின் கீழ் இணைக்கப்படாமல் இருந்தனர். இதனால் அவர்கள் கட்டாய வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் (Pension System) மற்றும் காப்பீட்டுப் பாதுகாப்புகளைப் பெற இயலாத நிலை இருந்தது.
தற்போது ஊதிய வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டதன் மூலம், ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஊதியம் பெறும் ஊழியர்களுக்குச் சேமிப்பு மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்பு உறுதியாகியுள்ளது.

