கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் விஜய், 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இவருடைய வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், முதலமைச்சர் விஜய் தனது வேட்புமனுவில் பன்ரூட்டியில் உள்ள ₹30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இத் தேர்தல் வழக்குகளை ஆரம்பக்கட்டத்திலேயே நிராகரிக்கக் கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம் மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நடைபெற்றது.

அப்போது விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் சட்ட ஆணையப் பரிந்துரைகளையும் சுட்டிக்காட்டி வாதிட்டனர். வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், எனவே இத் தேர்தல் வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில், "சொத்து விவரங்களை மறைப்பது விதிமீறல் மட்டுமல்ல, அது ஊழல் நடவடிக்கை" எனக் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன்: "ஒரு உச்ச நட்சத்திரமான முதலமைச்சர் விஜய் ₹600 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாகக் கணக்கு காட்டியுள்ளார். அதில் ₹30 கோடி ரூபாய் சொத்து விடுபட்டது அவருடைய தேர்தல் வெற்றியை எப்படிப் பாதிக்கும்?

கோடீஸ்வரர்களிடம் எங்கெல்லாம் சொத்து இருக்கிறது எனக் கேட்டால் அவர்களுக்கு எப்படி உடனடியாக நினைவில் இருக்கும்? கணக்கு தணிக்கையாளர் செய்த தவறுக்காக, முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு விஜய் பெற்ற வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க முடியுமா?"* எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

அனைத்துத் தரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், மனுதாரர்களின் குற்றச்சாட்டுகளையும் விஜய் தரப்பு விளக்கங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன், வழக்கினை நிராகரிக்கக் கோரி முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்த மனு மீது வரும் அக்டோபர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.