வறட்சி இழப்பீடு, பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதூர் வேளாண்மைத் துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டுத் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் 2025–2026 நிதியாண்டில் கடும் வறட்சியால் ஏற்பட்ட பயிர் இழப்பிற்கு உரிய இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். உளுந்து, பாசிப்பயிரைப் போல மிளகாய், கொத்தமல்லி, சோளம், கம்பு, மக்காச்சோளம், சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களுக்கும் அரசே ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

விவசாயிகள் அனைவருக்கும் பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்துக் கிராமக் கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் வண்டல் மண் மற்றும் கரிசல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோரிக்கைகளை வலியுறுத்தி புதூர் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர், காவல்துறையினர் தலையிட்டு, துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளைப் புதூர் வேளாண்மைத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

காலை 10 மணிக்கே விவசாயிகள் அலுவலகத்திற்கு வந்த நிலையில், காலை 11 மணி வரை அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மதியம் 12 மணியளவில் சாவகாசமாக வந்த அதிகாரிகளின் போக்கைக் கண்டித்து, விவசாயிகள் வேளாண்மைத் துறை அலுவலகத்தின் முன் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் இணைந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காட்டு விலங்குகள் தொல்லை, குடிநீர்ப் பிரச்சனை, கால்நடை வளர்ப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து விவசாயிகள் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர்.

இறுதியில், "பயிர் காப்பீட்டுத் தொகை குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் உரிய உறுதிப்பூர்வமான தகவல் தெரிவிக்கப்படும்" என அதிகாரிகள் உறுதியளித்ததை ஏற்று, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.