தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர், மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, "கோடை காலம் போன்ற தற்போதைய சூழலிலும் மாநகரப் பகுதியில் இதுவரை குடிநீர்ப் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. தசரா பண்டிகைக்குப் பிறகு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 55 மாத காலமாக மாநகராட்சி உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்புடன் மாநகர வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய திமுக உறுப்பினர் கனகராஜ், "கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாநகராட்சியில் இருந்து பத்திரப் பதிவிற்கான 'எல்லார் காப்பி' வழங்கப்படவில்லை. இருப்பினும் பத்திரப் பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" எனக் குற்றம்சாட்டினார்.
இதைக் கேட்ட மேயர் ஜெகன் பெரியசாமி, இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடனும் உஷாராகவும் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தூய்மைப் பணியாளர்களின் செயல்பாடு குறித்து திமுக கவுன்சிலர் சுரேஷ்குமார், கம்யூனிஸ்ட் உறுப்பினர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டினர். இதற்குப் பதிலளித்த மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா மற்றும் சுகாதார அலுவலர் ஹரிகணேஷ் ஆகியோர், "பொதுமக்கள் தான் குப்பைகளை மக்கும், மக்காத குப்பை எனப் பிரித்துக் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
அதிகாரிகளின் இந்த பதிலுக்கு ஒட்டுமொத்த மாமன்ற உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திமுக கவுன்சிலர் ரெக்ஸிலின் பேசுகையில், "தெருக்களில் உள்ள சாக்கடை கான்கள் சரிவர சுத்தம் செய்யப்படுவதில்லை" என்று குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, "மாநகராட்சி ஊழியர்களும் அலுவலர்களும் தங்களது பணிகளை ஒழுங்காகச் செய்யாவிட்டால், மக்களைத் திரட்டி அவர்களைக் கண்டிக்கும் உரிமையை நான் உங்களுக்கு (உறுப்பினர்களுக்கு) வழங்குகிறேன்" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

மேயரின் இந்த அறிவிப்பை அனைத்து உறுப்பினர்களும் மேஜையைத் தட்டி பலமாக வரவேற்றனர். கவுன்சிலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

