எம்ஜிஆருக்குப் பிறகு கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தவர் விஜய் என்றும், திருமங்கலம் பார்முலாவை உடைத்து தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு ரூபாய் கூட வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் தவெக வெற்றி பெற்றுள்ளதே அது ஒரு தூய்மையான சக்தி என்பதற்குச் சான்று என்றும் முன்னாள் அமைச்சரும், தவெக மாநில நிர்வாகியுமான கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்ததாவது: "கடந்த 2009 திருமங்கலம் இடைத்தேர்தலின் போதுதான் தேர்தலில் மக்களைச் சந்திப்பதில் லஞ்ச லாவண்யம் தலையெடுத்தது. அந்த 'திருமங்கலம் பார்முலாவை' நாட்டிற்கு அடையாளம் காட்டியது திமுகதான். அதன் பிறகு வேறு வழியில்லாமல் அனைத்துக் கட்சிகளுமே மக்களைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது.
ஆனால், சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டைத் திருடாமல் தவெக நேர்மையாகச் சந்தித்து வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தல் என்றாலே தீபாவளி, பொங்கல் போல வாக்காளர்களைப் பணத்தால் ஈர்க்கும் வழக்கம் மாறி, தவெக தூய்மையான சக்தி என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சி காரணமாக விலைவாசி உயர்வதும், பொருளாதாரம் சீரடையும்போது விலை குறைவதும் இந்தியா முழுவதும் மற்றும் உலகளவில் உள்ள பொதுவான நிலைதான் என்றும், விலைவாசியைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் குழு அமைத்துள்ளதாகவும், விரைவில் விலைவாசி முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.
காவிரி பிரச்சனைக்காகத் தஞ்சாவூர் சென்றுவிட்டு, காவிரியைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் பேசாமல் பெண்களைப் பற்றிப் பேசியதற்காகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 50 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருந்தேன், மிசாவைச் சந்தித்தேன் என்கிறார். ஆனால் 5 ஆண்டுகள் தமிழக முதலமைச்சராக இருந்தவர், தாராபுரத்தில் பெண் வேட்பாளரை உருவக் கேலி செய்கிறார்.
திமுக காலம் காலமாக இதைத்தான் செய்து வருகிறது. புரட்சித் தலைவி அம்மாவை இப்படித்தான் இழிவுபடுத்தினார்கள். சட்டமன்றத்தில் பெண் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல் புடலையை, தலைமுடியைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தினர். இது திமுகவின் ரத்தத்தில் ஊறிப்போன குணம். மக்களும் இவர்கள் திருந்த வேண்டும் எனத் தீர்ப்பளித்தும் அவர்கள் மாறவில்லை" என்றார்.

