நெல்லை மாவட்டம், ஏர்வாடி அடுத்த தளபதிசமுத்திரத்தை அடுத்த ஆச்சியூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல். இவரது மனைவி ராஜலட்சுமி (43). இவர்கள் சம்பவத்தன்று இரவில் தளபதிசமுத்திரத்தில் இருந்து ஆச்சியூர் காலனி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களைப் பின் தொடர்ந்து ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இருள் சூழ்ந்த பகுதிக்குச் சென்றபோது, அந்த காரானது திடீரென முந்திச் சென்று மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே நிறுத்தி வழிமறித்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்துவேல் சுதாரிப்பதற்குள், காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் காதில் அணிந்திருந்த கம்மலையும் பறித்துக்கொண்டு, மிரட்டல் விடுத்துவிட்டு அதே காரில் தப்பியோடினர்.
இந்தத் துணிகர நகை பறிப்பு சம்பவம் குறித்து முத்துவேல் உடனடியாகத் தனது செல்போன் மூலம் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் இதுபற்றி ஏர்வாடி போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியிடம் காரில் வந்து வழிமறித்து நகை பறிக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

