கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அருமனை பேரூராட்சித் தலைவர் லதிகாமேரி மற்றும் அவரது கணவர் ஸ்காட்வின் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து குமரி மாவட்டச் செயலாளர் என்.எஸ். கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியின் 14-வது வார்டு உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் லதிகாமேரி.
இவர் கட்சியின் வலியவிளை கிளை உறுப்பினரான ஸ்காட்வின் என்பவரின் மனைவி ஆவார். வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பேரூராட்சித் தலைவர் தேர்தலிலும் வெற்றி பெற்று அருமனை பேரூராட்சித் தலைவராக லதிகாமேரி செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், பேரூராட்சித் தலைவர் லதிகாமேரி மற்றும் அவரது கணவர் ஸ்காட்வின் ஆகியோர் தொடர்ந்து கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி சிபிஐ(எம்) குமரி மாவட்டக் குழு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

