திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டிப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் இன்று (14.11.2026) தொடங்கி வைத்தார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருநெல்வேலி பிரிவின் சார்பில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலுமிருந்து 112-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இப்போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு 13 வயது, 15 வயது மற்றும் 17 வயது என மூன்று வயதுப் பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. மற்றும் மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவுக்கான போட்டிகள் நடைபெற்றன.

போட்டியில் பங்கேற்றவர்கள் மாநகர ஆணையர் பங்களா, டி.ஐ.ஜி. பங்களா, அன்னை ஹலோ பிளாக், திருச்செந்தூர் சாலை, ஆச்சிமடம் பெட்ரோல் பங்க், புவிஈர்ப்பு மையம் வழியாகச் சென்று, அதே வழித்தடத்தில் மீண்டும் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்பட்டது. மேலும், நான்கு முதல் பத்தாம் இடம் வரை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.250 ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.