பாளையங்கோட்டை குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம், தத்தெடுக்கப்பட்ட கிராமமான ஆரோக்கியநாதபுரத்தில் செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முகாமின் தொடக்க நாளில் விதைப்பந்துகள் பிரச்சாரகர் வெங்கடாம்பட்டி பூ. திருமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார். மேலும், விதைப்பந்துகள் தயாரிக்கும் முறை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.
ஆரோக்கியநாதபுரம் அருட்தந்தை ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரெனிபா, உதவி திட்ட அலுவலர் எஸ்தர் மேரி கிறிஸ்டி மற்றும் ஊர் நாட்டாமை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பங்கேற்ற குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-1 மாணவியர் மிகவும் ஆர்வத்துடன் விதைப்பந்துகளைத் தயாரித்தனர். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பங்காற்றிய ஆசிரியைகள் ரெனிபா மற்றும் எஸ்தர் மேரி கிறிஸ்டி ஆகியோருக்கு "பசுமைப் போராளி விருதினை ஹரி பிரியாணி உரிமையாளர் ஹரி மற்றும் பூ. திருமாறன் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளையும் அருட்சகோதரிகள் பென்சிட்டா மற்றும் செல்வதெரஸ் ஆகியோர் செய்திருந்தனர். பள்ளித் தலைமையாசிரியை அருட்சகோதரி அற்புத மேரியின் சிறப்பான முகாம் திட்ட வடிவமைப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இம்முகாமின் போது காசநோய் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவியர் கிராம மக்களிடையே தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் பசுமை ஜவஹர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

