பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதப் பிரச்சினையில் இந்தியாவின் நிலையை அமெரிக்கா முழுமையாகப் புரிந்துகொள்ளாததால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சவைக் கூட்டத்தில் உரைநிகழ்த்திய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போர் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என்று உறுதிபடத் தெரிவித்தார். அப்போது பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல், அந்நாட்டின் பயங்கரவாத ஆதரவுக் கொள்கையைக் கடுமையாகச் சாடினார்.
இதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள 'ஆசியா சொசைட்டி' அமைப்பிற்கு அளித்துப் பேட்டியளித்த அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: "பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதப் பிரச்சினையை இந்தியா சந்தித்து வருகிறது. அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகச் செயல்படுவதோடு, அந்நாடும் அவர்களுக்குப் புகலிடம் அளித்து வருகிறது.
ஆனால், இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதப் பிரச்சினையை அமெரிக்கா முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. இதன் காரணமாகவே இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சில பாதிப்புகள் எழுந்துள்ளன.
முன்னதாக, அமெரிக்காவுடன் மட்டுமே இந்தியா நட்புறவைப் பேண வேண்டும் என்று அமெரிக்க அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால் இந்தியா அனைத்து நாடுகளுடனும் சமமான நட்புறவையே பேணி வந்தது. தற்சமயம் இந்தியாவின் இக் கொள்கையையே அமெரிக்காவும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடனும் அமெரிக்கா நட்புறவை ஏற்படுத்தி வருகிறது."
வர்த்தக ஒப்பந்தம் குறித்து நம்பிக்கை:
"மேலும், அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கை காரணமாகவும் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. பல்வேறு உலக நாடுகளும் இதே பிரச்சினையைச் சந்தித்து வருகின்றன. இருப்பினும், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியானால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் பலப்படும்" என அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

