தூத்துக்குடியின் வரலாறு (7 of 10)

தூத்துக்குடியில் பஞ்சாலைகள்

பருத்தி ஏற்றுமதி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு போகவே, ஆங்கிலப் படையைச் சேர்ந்த ஏ.எப்.ஹார்வி சகோதரர்கள் "கோரல்மில்" என்ற பஞ்சாலையை 1888ல் தூத்துக்குடியில் ஆரம்பித்தனர். இயந்திரத்தால் பருத்தியிலிருந்து கொட்டையை நீக்கும் தொழில்நுட்ப முயற்சி 1894ல் தொடங்கினர்.

இங்கிலாந்திலிருந்து வந்த ஏ அண்டு எம் ஹார்வி கம்பெனியார் பருத்தியை பஞ்சாக்கும், நூலாக்கும் தொழில் செய்து கொண்டிருக்க, ராலி சகோதரர்கள் என்ற மற்றொரு கம்பெனியார், நீராவியை உபயோகித்து பருத்தியை பஞ்சாக்கினார்கள். இவர்களுக்கு தூத்துக்குடி துறைமுகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் முக்கிய அங்கம் வகித்தது.

தூத்துக்குடியில் சுதந்திர போராட்டம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில், தூத்துக்குடி இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் ஓர் அரணாகிவிட்டது. வ.உ.சிதம்பரம் பிள்ளை ஓட்டப்பிடாரத்தில் பிறந்து, தூத்துக்குடியில் கல்வி கற்று, திருச்சியில் பிலீடர் பட்டம் பெற்று, தன் வழக்கறிஞர் தொழிலை தூத்துக்குடியில் 1900ம் ஆண்டு குடிபுகுந்தார்.

தேசிய உணர்ச்சியையும், சுய ஆட்சி பற்றையும் மக்கள் மத்தியில் பரப்ப, தூத்துக்குடியில் "விவேகபானு" என்ற தமிழ் பத்திரிக்கையை ஆரம்பித்தார். அப்பத்திரிக்கை மூலம் சமூக சீர்திருத்தங்கள் செய்யவும் அவர் முயன்றார்.

கடற்கரைப் பகுதி இடங்களுக்கு, பயணிகளையும், வணிகப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல ஆங்கிலேயருக்கு இருந்த ஏகபோக உரிமையை முதலில் தாக்கி ஒழிக்க முயன்றார். ஓர் சுதேசிய கம்பல் கம்பெனியை உருவாக்க, நிதி திரட்டுவதற்கு இந்தியர்களிடையே பங்குரிமைகளை விற்றார். நிதி திரட்ட, மிக ஆர்வத்துடன் இந்தியா முழுவதும் அவர் அலைந்து, இறுதியில் இரண்டு நீராவிக் கப்பல்கைள வாங்குவதற்கு மும்பை சென்றார்.

அந்த கப்பல்கள் 1907ம் ஆண்டு ஜூன் முதல் தேதி தூத்துக்குடி வந்து சேர்ந்தன. "எஸ்.எஸ்.கேலியா" பெயர்கொண்ட முதல் கப்பல் மேல்தளத்தில் வ.உ. சிதம்பரம்பிள்ளை அமர்ந்திருந்தார். அதற்குப் பின்னால் வந்த இரண்டாவது கப்பலின் பெயர் "எஸ்.என்.லாவோ". ஒரு தேசிய வீரனுக்கு அளிக்கவேண்டிய கெளரவத்துடன் வ.உ.சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடியில் வரவேற்கப்பட்டார்.


Favorite tagsThoothukudi Business Directory