தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சரும் அக்கட்சியின் தலைவருமான விஜய் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சார மேடையில் த.வெ.க. அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும், திருப்பூர் மாவட்டத்திற்கான புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் விஜய் பேசியதாவது: "வாக்குறுதி அளித்தபடி ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் பண்டிகை முதல் முழுமையாகச் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், முதியோர்களுக்கெனத் தனி காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

மகளிர் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த 'சிங்கப்பெண்' திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுப் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் தாய்மாமன் திட்டத்தில் மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது. நெல் மற்றும் பால் கொள்முதல் விலைகள் உயர்த்தப்பட்டுத் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் ஊழலற்ற நிர்வாகத்தை முழு முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. இதன் பலனாகக் கடந்த 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன."

திருப்பூர் மாவட்டத்திற்கான திட்டங்கள்:

திருப்பூர் மாவட்ட நிலவரம் குறித்துப் பேசிய முதலமைச்சர், "திருப்பூரில் உயிரியல் பாதுகாப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. அதேபோல, திருப்பூரில் பல்வேறு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையடையாமல் இருப்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இலவச வீட்டுமனை பட்டா தட்டுப்பாடு, கால்வாய்கள் தூர்வாரப்படாதது மற்றும் பாசன நீர் தட்டுப்பாட்டால் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள தாராபுரம் பகுதியின் மேம்பாட்டிற்குச் சிறப்பு கவனம் செலுத்தப்படும். மேலும், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.72 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.

இப்பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.