ஆழ்வார்குறிச்சி அருகே, சிறுவன் ஓட்டி வந்த பைக் மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகச் சிறுவனின் தந்தையைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள அழகப்பபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குண்டுமணி. இவரது மனைவி மாடக்கண்ணு (75). விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாடக்கண்ணு, நேற்று இரவு உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு மெயின் ரோட்டில் சாலையோரமாக நடந்து வந்துகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக மாடக்கண்ணு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துத் தகவலறிந்த ஆழ்வார்குறிச்சி காவல் நிலையப் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் நெல்லை டவுண் முகமது அலி தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் முகமது ரிஸ்வான் என்பதும், அவருக்கு 17 வயது மட்டுமே ஆகிறது (சிறுவன்) என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவனுக்கு இருசக்கர வாகனத்தைக் கொடுத்து ஓட்ட அனுமதித்ததற்காகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுவனின் தந்தையான சாகுல் ஹமீதுவைக் கைது செய்தனர்.

