தென்காசியில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தென்காசியில் இருந்து நேற்று காலை அரசுப் பேருந்து ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தது. சம்பவம்: பேருந்தில் களக்காடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெபஸ்டின் (41) என்பவர் பணகுடிக்கு பயணச்சீட்டு எடுத்து பயணித்தார். அவருக்கு அருகில் உள்ள இருக்கையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் அமர்ந்திருந்தார்.

பயணம் செய்தபோது ஜெபஸ்டின் அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தமிட்டு கூச்சலிட்டார். மாணவியின் கூச்சலைக் கேட்டுப் பேருந்திலிருந்த சக மாணவிகளும் மற்ற பயணிகளும் ஜெபஸ்டினைக் கண்டித்துத் தட்டிக்கேட்டனர்.

இருப்பினும் அவர் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தைப் பணகுடி காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். பேருந்தில் இருந்த பயணிகள் ஜெபஸ்டினைப் பணகுடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஜெயபாண்டி, ஜெபஸ்டினை அதிரடியாகக் கைது செய்தார். விசாரணையில் அவர் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. அவரிடமிருந்த அடையாள அட்டையைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.