டாடா டிரஸ்ட் சேர்மன் நோயல் டாடாவுடன் ஏற்பட்ட நிர்வாக ரீதியான கருத்து வேறுபாடுகள் காரணமாக, டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் (63) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

இவரது பதவிக்காலம் 2027 பிப்ரவரி வரை இருந்தபோதிலும், வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக இந்தத் திடீர் முடிவை எடுத்துள்ளார். இவரின் ராஜினாமா செய்தியைத் தொடர்ந்து, டி.சி.எஸ் (TCS) நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

சந்திரசேகரன் அறிக்கை:

"டாடா குழுமத்தில் எனது 40 ஆண்டுகால தொழில் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளேன். வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதியுடன் எனது பதவிக்காலம் முடிவடையும் நிலையில், மீண்டும் மறுநியமனத்திற்கு என்னை முன்மொழியப் போவதில்லை என்று டாடா சன்ஸ் வாரியத்திடம் தெரிவித்துவிட்டேன்.

டாடா குழுமத்தை அடுத்து வழிநடத்த புதிய தலைவரைத் தேர்வு செய்யவும், முறையான தலைமை மாற்றத்தை உறுதி செய்யவும் வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளேன். இந்த நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததற்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

2017-ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற சந்திரசேகரன், மறைந்த ரத்தன் டாடாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், டாடா குழுமத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகவும் திகழ்ந்தார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டாடா மோட்டார்ஸ், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் உள்ளிட்ட பல முன்னணி டாடா குழும நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த இவர், தமிழ் வழிக் கல்வியில் பயின்று, கோவை சி.ஐ.டி. மற்றும் திருச்சி ஆர்.இ.சி. கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்.