நில அளவை பணிக்குச் சென்ற அரசு ஊழியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGEA) சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் அரசங்குளம் கிராமத்தில் உள்ள கந்தையா மற்றும் லட்சுமணன் ஆகியோருக்கிடையே இடப்பிரச்சினை நிலவி வந்தது. இது தொடர்பாக நில அளவை பணிக்காகச் சென்ற குறுவட்ட அளவையர் மகேஷ் என்பவரை, லட்சுமணன் தரப்பினர் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தினர். காயமடைந்த அளவையர் மகேஷ் தற்போது கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறுவட்ட அளவையர் மகேஷைத் தாக்கிய நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். நில அளவையர் மீது புனையப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாலைநடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முருகன் மற்றும் தாசில்தார் சுவாமிநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.