திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (13.11.2026) நடைபெற்ற விதைப்பந்துகள் தயாரிக்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதை நேரில் பார்வையிட்டு, அவர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள 544 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என ஒவ்வொரு பள்ளிகளுக்கும் இலக்கு நிர்ணயித்து, ஒரு கோடி விதைப்பந்துகள் தயாரித்து வீசும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் மாணவ, மாணவியர்கள் மூலம் வேம்பு, புளி, கொடுக்காப்புளி, புங்கன் இலவம், மருது, பூவரசு நெல்லி போன்ற பல்வேறு விதைகளை களிமண்ணில் வைத்து ஒரு கோடி பந்துகளாக உருவாக்க உள்ளனர். தயாரிக்கப்பட்ட விதைப்பந்துகள் மலைப்பகுதிகள், ஏரிக்கரைகள், ஆற்றங்கரைகள், சாலையோரங்கள் மற்றும் தரிசு நிலங்கள் உள்ளிட்ட பொருத்தமான இடங்களில் வீசப்பட உள்ளன. இதன் மூலம் விதைகள் இயற்கையாக முளைத்து மரங்களாக வளர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி, மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் இத்திட்டத்தில் நேரடியாகப் பங்கேற்பதன் மூலம் மரம் வளர்ப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவர்களிடையே ஏற்படுவதுடன், எதிர்காலத் தலைமுறையினரிடம் இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வும் வளர்க்கப்படுகிறது. “அனைவரும் இணைந்து காலநிலை மாற்றத்தை எதிர்த்து புவியைக் காப்போம்” என்ற உறுதிமொழி உணர்வுடன் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தனது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், பள்ளி தாளாளர் அருட்சகோதரி பென்சிட்டா, பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி அற்புத மேரி, சமூக ஆர்வலர்கள் டாக்டர் ஏகலைவன் ஹரிஹர செல்வன், வெங்கடாப்பட்டி திருமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.