திருநெல்வேலி தாழையூத்து பஞ்சாயத்து அலுவலகத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது நண்பர் முருகன் மகன் சிவா என்ற மொட்டை சிவா (25).
இவர்கள் இருவரும் புரோக்கராகச் செயல்பட்டு வந்த ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி (25) என்பவர் மூலமாக 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரைத் தாழையூத்து காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
காட்டுப்பகுதியில் வைத்து மதுபோதையில் இருந்த மணிகண்டனும் சிவாவும் அப்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவரது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கித் தங்கள் அலைபேசியில் படம் பிடித்துள்ளனர். பின்னர், அப்பெண் அணிந்திருந்த தங்க நகை மற்றும் அலைபேசியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட மாயாண்டி (25), மணிகண்டன் (27) மற்றும் சிவா என்ற மொட்டை சிவா (25) ஆகிய 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

