நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருவரைப் பாளையங்கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹபிபர் ரகுமான் (28) மற்றும் அஸிமுல் அலி (22) ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் தங்கித் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில், அஸிமுல் அலியின் உறவினர் ஒருவர் உடல்நலக் குறைவால் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று மாலையில் உறவினரைப் பார்ப்பதற்காக இருவரும் அந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அப்போது, அங்குப் பணியில் இருந்த 22 வயதுடைய பெண் ஊழியரிடம் இருவரும் சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உடனடியாகப் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்த ஹபிபர் ரகுமான் மற்றும் அஸிமுல் அலி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

