குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, நீதி கேட்டுப் போராடும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்தத் தமிழக வெற்றி கழக ஆட்சி உள்ளது" என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் தமிழ்ச்செல்வன் என்பவர் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கூடல்புதூர் பகுதியில் உள்ள ஒரு கண்மாயில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்துக் கூடல்புதூர் காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும், மாணவர் தமிழ்ச்செல்வன் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பரவியதையடுத்து, அவரது உறவினர்களும் பொதுமக்களும் நீதி கேட்டுத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பிரச்சினை தொடர்பாகத் திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: "மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது த.வெ.க அரசு.

உடற்கூறாய்வு அறிக்கையில் அம்மாணவன் கடுமையாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், வழக்கை தீவிரமாக விசாரித்து உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய காவல்துறை, நியாயம் கேட்கும் பொதுமக்களைக் கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்தத் த.வெ.க ஆட்சி செயல்பட்டு வருகிறது." இவ்வாறு கனிமொழி எம்.பி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.