திருச்செந்தூர் தெப்பக்குளம் தெருவில் உள்ள அரசு ஆழ்வார் விநாயகர் கோவில் தங்களுக்குப் பாத்தியப்பட்டது என்ற வருவாய் கோட்டாட்சியரின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி, பூட்டப்பட்டுள்ள கோவில் பூட்டைத் திறக்கக் கோரி திரிசுதந்திரர்கள் குடும்பத்துடன் கோவில் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் தெப்பக்குளம் தெருவில் அமைந்துள்ள அரசு ஆழ்வார் விநாயகர் கோவிலில், முக்காணி திரிசுதந்திரர்கள் சமுதாயத்தின் சார்பில் கடந்த 110 ஆண்டுகளாக 'முருகா ஜெபம்' மற்றும் ஆவணி சஷ்டி வழிபாடுகள் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கடந்த ஆண்டு தனிநபர் ஒருவர் இந்தக் கோவில் அமைந்துள்ள இடம் தனக்குச் சொந்தமானது என உரிமை கோரியதால் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.
இப்பிரச்சினை குறித்துத் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாகக் கோட்டாட்சியர் நடத்திய தொடர் விசாரணையின் முடிவில், சம்பந்தப்பட்ட கோவில் நிலம் தனிநபருக்குச் சொந்தமானது அல்ல என்றும், அது முக்காணி திரிசுதந்திரர்கள் சமுதாயத்திற்கே பாத்தியப்பட்டது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இருப்பினும், கோட்டாட்சியரின் உத்தரவு வெளியான பிறகும் கோவிலில் தொடர்ந்து வழிபாடு நடத்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கோவில் பூட்டப்பட்டு வழிபாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, ஆர்.டி.ஓ விசாரணையின் உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாத வண்ணம் காவல் துறை நடவடிக்கை எடுத்து, கோவில் பூட்டைத் திறந்து தர வேண்டும் எனக் வலியுறுத்தித் திரிசுதந்திரர்கள் குடும்பத்துடன் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் 'முருகா ஜெபம்' விழா நடைபெற உள்ள நிலையில் இச்சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

