தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் ஆனந்த் (46), கூலித் தொழிலாளி. இவர் அய்யனடைப்பு பகுதியில் கிடைக்கின்ற வேலைகளைச் செய்து கொண்டு, அங்குள்ள விறகுக் கடை அருகே இரவில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் அக் கடை அருகே ஆனந்த் தலையில் கல்லாலும், விறகுக் கட்டையாலும் பலமாக அடிபட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். இச் சம்பவம் குறித்துச் சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், நண்பருடன் சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட திடீர் தகராறில் ஆனந்த் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆனந்தின் நண்பரான அய்யனார்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (54) என்பவரைச் சிப்காட் போலீசார் நேற்று அதிரடியாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாரிமுத்து காவல்துறையினரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது: "நானும் ஆனந்தும் பகல் நேரங்களில் கூலி வேலை செய்துவிட்டு, இரவில் அய்யனடைப்பு விறகுக் கடை அருகே படுத்து உறங்குவோம். தூங்குவதற்கு முன்பாக இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கம்.

சம்பவத்தன்றும் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். அப்போது, எனது குடும்பத்தைப் பற்றி ஆனந்த் மிகவும் அவதூறாகப் பேசினார். இதில் எங்களுக்குள் கடுமையான தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான், அங்கிருந்த விறகுக் கட்டையால் ஆனந்தின் தலையில் பலமாக அடித்தேன்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனே நான் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டேன்" என்று கூறியுள்ளார். கொலை வழக்கின் பின்னணி குறித்துச் சிப்காட் காவல்துறையினர் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.