நேபாளத்தில் பயங்கர வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தூத்துக்குடி புனித லசால் பள்ளி சார்பில் மௌன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

வடக்கு நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள லெண்டே கோலா ஆற்றில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக, 'போடேகோஷி' எல்லை நதியில் திடீரெனப் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுவரை 200-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாள அரசு அறிவிப்பின்படி 650-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்; 1,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் உள்ளிட்ட பயணங்கள் சென்ற 178 பேரை காணவில்லை என நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் விதமாகவும் தூத்துக்குடி புனித லசால் பள்ளியில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் அருட்சகோதரர் இராபர்ட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனச் சுமார் 1,000 பேர் கலந்துகொண்டு மெளன அஞ்சலி செலுத்தினர்.