இதன் ஒரு பகுதியாக, கடந்த 6 மாதங்களாக ஒருமுறை கூட ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகளை நாளை முதல் தற்காலிகமாக முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இக் கடுமையான உத்தரவால் நாடு முழுவதும் சுமார் 1.5 கோடி ரேஷன் கார்டுகள் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத்தில் உள்ள நபர்கள் இறந்திருந்தாலோ, ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளை வைத்திருந்தாலோ அல்லது வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்த பிறகும் பழைய கார்டுகளை வைத்திருந்தாலோ அத்தகைய கார்டுகளைக் கண்டறியவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ரேஷன் தரவுகளைக் கணினிமயமாக்குதல், ஆதார் இணைப்பு மற்றும் கைவிரல் ரேகை பதிவு (e-KYC) ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஜூலை 30 நிலவரப்படி, 90.64% கைவிரல் ரேகை பதிவுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. முன்னதாக, கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் கணக்குச் சரிபார்ப்பு மூலம் சுமார் 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டதாக மத்திய உணவுத் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் போன உண்மையான பயனாளிகள் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 6 மாதங்களாகப் பொருட்கள் வாங்காத கார்டுகள் முதற்கட்டமாகத் 'தற்காலிகமாக' மட்டுமே முடக்கப்படும்; கணினியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படாது.
உண்மையான பயனாளிகள் தங்களின் கார்டுகளை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவர நாளை முதல் ஜனவரி 1 வரை (3 மாதங்கள்) கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இக் காலக்கட்டத்திற்குள் சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களுடன் கைவிரல் ரேகை பதிவை (e-KYC) சரிவர முடிக்க வேண்டும்.
அதன் பின்னர், அதிகாரிகள் கள ஆய்வு செய்து கார்டின் தகுதியை உறுதிசெய்தவுடன், முடக்கப்பட்ட ரேஷன் கார்டுகள் உடனடியாக மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

