நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘கருப்பு’ மற்றும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து, ஜித்து மாதவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தனது அகில இந்திய நற்பணி இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களை நடிகர் சூர்யா நேரில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய நடிகர் சூர்யா, அவர்களுக்குச் சில முக்கியமான அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது: "நாம் எப்போதும் அன்பை மட்டுமே விதைப்போம். சமூக ஊடகங்களில் யாரோ ஒரு முட்டாள் ஒரு தவறான பதிவைப் போட்டதற்காக, நாமும் அவர்களுக்குப் பதிலுக்குப் பேச ஆரம்பித்தால் நாமும் முட்டாளாகவே மாறிவிடுவோம். நாம் நாமாகவே இருப்போம்; அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். நாம் எதுவுமே பேசத் தேவையில்லை.

அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்றோ அல்லது அவர்களை மாற்ற வேண்டும் என்றோ முயற்சி செய்தால் நமக்குத்தான் கஷ்டம். எனவே உங்களது ஆற்றலையும் சக்தியையும் அதற்காக வீணடிக்க வேண்டாம். உங்களுக்குப் பிடித்தமான, நல்ல விஷயங்களைத் தினமும் தொடர்ந்து செய்யுங்கள்; நிச்சயமாக வெற்றி உங்களைத் தேடி வரும்" என்று பேசினார்.