சட்டவிரோதமாகக் கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்தது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள சத்திரவெள்ளாளப்பட்டியில் குவாரி குத்தகைதாரர் ஒருவர், அனுமதி பெறாத நிலத்திலிருந்து சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாகச் சரளைக் கற்களை வெட்டி எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு முறையே ரூ.2.32 கோடி மற்றும் ரூ.3.07 கோடி (மொத்தம் ரூ.5.39 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கனிமவளத்துறை ஆய்வின் அடிப்படையில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்குகள் தொடர்பாக, மதுரை அய்யர் பங்களா, எழில் நகர், ரோஜா வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தியின் வீட்டிற்கு டிஎஸ்பி பொன்ராம் தலைமையிலான போலீசார் சென்றனர். அங்கு மூர்த்தியிடம் சோதனை நடத்துவதற்கான கடிதத்தை வழங்கிவிட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சட்டவிரோதமாகச் செம்மண் மற்றும் கற்களை வெட்டி எடுத்த குவாரி தொடர்பான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பாலமேடு பகுதியில் பி.மூர்த்தி கிரஷர் ஜல்லி தொழிற்சாலை நடத்தி வருவதால், அங்குச் சட்டவிரோதமாகக் கற்கள் கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, மூர்த்தியின் உறவினர்களான தன்ராஜ், அலங்காநல்லூர் பொன்ராம் மற்றும் பூவந்தி பகுதியில் உள்ள அவரது மைத்துனர் ராஜாமணி ஆகியோரது வீடுகளிலும் மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை நடைபெறுவதை அறிந்து அப்பகுதியில் ஏராளமான திமுகவினர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

