சட்டமன்றத்தில் நடைபெற்ற காரசார விவாதத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் குறித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவதூறாகவும் ஒருமையிலும் பேசியதாகத் திமுக எம்பி ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் மீது காவல் துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது உரையாற்றிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சியின் போது எழுந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுக மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டதுடன், அவரை உருவக் கேலி செய்யும் வகையில் சைகை செய்ததாகக் கூறி திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் கடந்த 12-ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பி.கே.சேகர்பாபு மீது வழக்கு:

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் விமர்த்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில், பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியைக் குலைக்கும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வடக்கு கடற்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆ.ராசா மீது வழக்கு:

சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, முதலமைச்சரைக் கடுமையாக விமர்சித்ததாகத் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சைதாப்பேட்டை காவல் நிலையப் போலீசார் ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.