தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஆவல்நத்தம், மேலத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் மாரிமுத்து (61). இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆவல்நத்தம் சந்திப்பு பகுதியில் நான்கு வழிச்சாலையைக் குறுக்காகக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, கங்கைகொண்டானிலிருந்து அருப்புக்கோட்டைக்கு சோலார் பொருட்களை ஏற்றுவதற்காகக் கோவில்பட்டி வழியாக வந்து கொண்டிருந்த லாரி அவரது வாகனம் மீது மோதியது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த கோவில்பட்டி கிழக்குக் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி முத்தையாபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் செல்வகுமார் (32) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.