தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை செயலர் அர்ச்சனா பட்நாயக், கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமையில் நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் தகுந்த முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை செயலர் அர்ச்சனா பட்நாயக் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
வைப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM - Electronic Voting Machines) வாக்காளர்கள் தங்களின் வாக்கினை உறுதிசெய்யும் விவிபேட் (VVPAT - Voter Verifiable Paper Audit Trail) கருவிகள் ஆகியவற்றின் இருப்பு மற்றும் அவற்றின் தற்போதைய பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வைப்புக் கிடங்கின் காப்பறைக்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பலகைகள், பூட்டுகள் மற்றும் சீல்கள் அனைத்தும் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி உள்ளனவா என்பது சரிபார்க்கப்பட்டது. பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சிசிடிவி கேமராக்களின் தொடர்ச்சியான செயல்பாடு, அவற்றின் கோணங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் நேரலையாகப் பதிவாகும் காட்சிகளின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
வைப்புக் கிடங்கிற்கு வந்து செல்லும் நபர்களின் விவரங்கள், இயந்திரங்களின் வருகை-இருப்புப் பதிவேடுகள் மற்றும் அன்றாட பாதுகாப்புத் தணிக்கைப் பதிவேடுகள் முறையாகவும் துல்லியமாகவும் பராமரிக்கப்படுகின்றனவா என விரிவாகச் சரிபார்க்கப்பட்டது.
ஆய்வில் மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வேலுமணி, உதவி ஆட்சியர் பயிற்சி ர.மோனிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.காளீஸ்வரி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் வேல்முருகன், தேர்தல் தனி வட்டாட்சியர் வினோத், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆறுமுகம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

