எட்டையபுரம் அருகே உள்ள குவாரியில் கணக்காளராக வேலை பார்த்து வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள பருத்திகுளத்தைச் சேர்ந்தவர் காந்தி மகன் ஸ்ரீராம கண்ணன் (31), இவர் எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் குவாரியில் கடந்த 3 ஆண்டுகளாக அக்கவுண்டன்ட் ஆக வேலை பார்த்து வந்துள்ளார்.
இன்று வழக்கம் போல் குளிப்பதற்காகத் தங்கும் இடத்தில் இருந்த மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது மோட்டாரில் இருந்த மின்கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், ஸ்ரீராம கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலின் பேரில் எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

