இராமநாதபுரம் சின்னப்பாலம் கடற்கரை கிராமத்தில் மீனவ மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான மீன்வளத் தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் மீன்வள விரிவாக்கத் துறை மற்றும் எம்பவர் இந்தியா சமூக செயல்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் சார்பில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான மீன்வளத் தொழில்நுட்பப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மீனவ சமூகங்கள் தொழில் தொடங்குவதற்கும், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இராமநாதபுரம் மாவட்டம் சின்னப்பாலம் கடற்கரை கிராமத்தில் நடைபெற்ற இப்பயிற்சியில், கடற்பாசி வளர்த்தல், மீன் மாவு, மீன் எண்ணெய், இறால் ஊறுகாய், மீன் கட்லெட் மற்றும் உலர் மீன் தயாரித்தல் ஆகியவை குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் ஆ.சங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்: இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டின் முக்கியமான கடல்சார் மீன்வள மாவட்டங்களில் ஒன்றாகும். நீண்ட கடற்கரைப் பகுதி, பாக் வளைகுடா, மன்னார் வளைகுடா கடல்சார் உயிரியல் வளங்கள் மற்றும் பாரம்பரிய மீன்பிடி முறைகள் இம்மாட்டத்தின் சிறப்பம்சமாகும். மீன்வளத் துறையின் எதிர்கால வளர்ச்சி ஒவ்வொரு வளத்திற்கும் அதிகபட்ச மதிப்பை உருவாக்குவதில் தான் உள்ளது" எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கடற்பாசி நிபுணர் செல்வநாயகம், கிருபா உட்படப் பலர் கலந்துகொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மீன்வளக் கல்லூரி பேராசிரியை அருள் மொழி மற்றும் எம்பவர் இந்தியா மேலாளர் லலிதாம்பிகை ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.