மருத்துவமனைகளில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்கவும், மருத்துவ அலட்சியக் குற்றச்சாட்டுகளை அறிவியல் மற்றும் சட்டப்பூர்வமாக அணுகவும் மாநில அளவில் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான செயல்முறை நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) தூத்துக்குடி கிளை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தூத்துக்குடி கிளைத் தலைவர் சரவணன், செயலாளர் சிவசைலம், பொருளாளர் ஆர்த்தி கண்ணன் ஆகியோர் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு : மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மற்றும் அச்சுறுத்தல் விடுப்பவர்கள் மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தகுதியான மருத்துவ நிபுணர்களின் அறிவியல் மதிப்பீடு இல்லாமல் எந்தவொரு சம்பவத்தையும் முன்கூட்டியே "மருத்துவ அலட்சியம்" எனக் கருதவோ அறிவிக்கவோ கூடாது. அதிகாரப்பூர்வ விசாரணையோ நீதிமன்றத் தீர்ப்போ இன்றி, உடனடி பண இழப்பீடு வழங்க மருத்துவர்களையோ மருத்துவமனைகளையோ நிர்ப்பந்திக்கக் கூடாது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். "எதிர்பாராத மருத்துவ விளைவுக்கும்" (Complication) "மருத்துவ அலட்சியத்திற்கும்" (Negligence) இடையேயான வேறுபாடு குறித்து பொதுமக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவர்கள் அச்ச உணர்வுடன் பணியாற்ற நேர்ந்தால், அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் தயக்கம் ஏற்படும் என்றும், இது இறுதியில் பொதுமக்களின் மருத்துவப் பாதுகாப்பையே பாதிக்கும் என்றும் IMA நிர்வாகிகள் தங்களது மனுவில் கவலை தெரிவித்துள்ளனர். "மருத்துவர்களின் பாதுகாப்பே - மக்களின் மருத்துவப் பாதுகாப்பு" என்பதைச் சுட்டிக்காட்டி இந்த கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.