சட்டமன்றத்தில் மதத்தை உயர்த்திப் பிடிப்பதற்காகத் தமிழ் மொழியைத் தாழ்த்திப் பேசிய தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத்தில் பட்ஜெட் உரை மீதான விவாதத்தின்போது, நிதியமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு குறித்து மதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சுட்டிக்காட்டிப் பேசினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் மரிய வில்சன், "எனது கிறிஸ்துவ மதம் எனக்கு ஒரு உயரிய மொழியைக் கற்றுக் கொடுத்துள்ளது. இத்தகைய சிறப்பான மொழியை எவ்வளவு தமிழ் படித்திருந்தாலும் இங்குள்ள பாதி பேருக்கு நிச்சயம் புரியாது" என்று ஆவேசமாகப் பேசினார். தமிழ் மொழியையும் மதத்தையும் ஒப்பிட்டு அமைச்சர் பேசிய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:"சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் 'என் மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது' என்று நிறுத்தியிருந்தால் அது அவரது தனிப்பட்ட அனுபவம். ஆனால், 'என் மதம் கற்றுக் கொடுத்ததை எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது' எனக் கூறியது தமிழின் மீதான தாக்குதலாகும்.
'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்ற ஒற்றைக் குறட்பாவில் அன்பின் பெருமையைக் கூறிய தாய்மொழி நம் தமிழ். உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மதத்தை உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை; ஆனால், தமிழ் மொழியைத் தாழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு அமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்."

