திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு அணைப் பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளைச் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மணிமுத்தாறு அணைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உணவகம், கழிவறைகள், பூங்கா மற்றும் சாகச சுற்றுலா வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்காக ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் இதுவரை சுமார் 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

எஞ்சியுள்ள பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வுகளைக் களைந்து, பணிகளைப் போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்தி, டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடித்துப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், "தமிழ்நாடு அரசின் கடந்த நிதிநிலை அறிக்கையில் காவிரி, வைகை மற்றும் தாமிரபரணி ஆறுகளை மையமாகக் கொண்டு நதிச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகச் சுமார் ரூ.13 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் விரைவில் துரிதப்படுத்தப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பாரம்பரியச் சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இவற்றைச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பார்வையிடும் வகையில் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் சுற்றுலா மேம்பாட்டிற்கான புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அவ்வாறு கண்டறியப்படும் திட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், சுற்றுலாத் துறை சார்ந்த மேம்பாட்டுப் பணிகள் பல்வேறு அரசுத் துறைகளுக்குச் சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், நீர்வளத்துறை, வனத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி மற்றும் தடையில்லாச் சான்றுகளைப் பெற வேண்டியுள்ளது.

எனவே, அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, சுற்றுலாத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவதற்கான ஒற்றைச் சாளர நடைமுறையை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, இயற்கை வளங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நீடித்த நிலையான சுற்றுலா வளர்ச்சியை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்" எனத் தெரிவித்தார்.

ManiMutharuArt.jpg

வடக்கன்குளம் தேவாலயத்தில் ஆய்வு:

முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் வடக்கன்குளம் தேவாலயத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ஏதுவாகத் தங்கும் அறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் ராஜேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளில் சேரன்மாதேவி சார் ஆட்சியர் ஆயுள் குத்தா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் தனலட்சுமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் நித்திய கல்யாணி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.