சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்,தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் மாநில மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் மெய்கண்டன் மனு அளித்தார்.

அந்த மனுவில், காது கேளாத மற்றும் வாய்பேசாத சைகைமொழி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி, திறன் மேம்பாடு, கல்வி உரிமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட கோரிக்கைகளை தங்களது கனிவான பரிசீலனைக்கு முன்வைக்கிறோம்.

1. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குக் கூடுதல் இடஒதுக்கீடு

தற்போது தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

இருப்பினும், இவ்விடங்களுக்கான போட்டியில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென கூடுதலாக 5% இடஒதுக்கீடு வழங்கி, அவர்களின் கல்வி வாய்ப்பையும் கல்வி வளர்ச்சியையும் உறுதி செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

2. காது கேளாத கண்காணிப்பாளர் நியமனம்

காது கேளாத மாணவர்கள் பயிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், அவர்களின் கல்வி மற்றும் தொடர்புத் தேவைகளை நன்கு புரிந்துகொள்ளக்கூடிய காது கேளாத கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கனவே தங்களிடம் மனுவாக அளித்துள்ளோம்.

அக்கோரிக்கையை பரிசீலித்து நடைமுறைப்படுத்துவதாக தாங்கள் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை இதுதொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றமும் மனவேதனையும் ஏற்பட்டுள்ளது.

எனவே, காது கேளாத மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் கல்விச் சூழல் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, இக்கோரிக்கையில் தனிக்கவனம் செலுத்தி, காது கேளாத கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கான உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

3. சைகைமொழி தெரிந்த ஆசிரியர்கள் நியமனம்

செவித்திறன் குறையுடைய மாணவர்கள் பயிலும் சிறப்புப் பள்ளிகளில், உரிய உயர்கல்வி அல்லது பட்டப்படிப்பு தகுதியுடன், சைகைமொழிப் பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

மேலும், காது கேளாத மற்றும் வாய்பேசாத மாணவர்களின் தனிப்பட்ட கல்வித் தேவைகளுக்கு ஏற்ப, சைகைமொழியுடன் இணைந்து தேவையான வாய்பேச்சுப் பயிற்சி மற்றும் தொடர்புத் திறன் பயிற்சிகளையும் வழங்குவதற்கான உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

4. ஆங்கிலப் பாடத்திலிருந்து விலக்கு தொடர்பாக

காது கேளாத மற்றும் வாய்பேசாத மாணவர்களுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆங்கிலப் பாடத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நடைமுறை தற்போதும் தொடர்கிறது.

எனவே, இம்மாணவர்களின் எதிர்கால கல்வி, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, அவர்களின் கல்வித் தேவைகளுக்கு ஏற்ற வகையில் தற்போதைய மொழிப்பாடத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

5. கல்வித் தொலைக்காட்சியில் சைகைமொழி மொழிபெயர்ப்பாளர் காட்சியைப் பெரிதாக்குதல்

கல்வித் தொலைக்காட்சியில் காது கேளாத பள்ளி மாணவர்களுக்காக ஒளிபரப்பப்படும் இணையவழி வகுப்புகளில், சைகைமொழி மொழிபெயர்ப்பாளரின் காணொளிப் பகுதி சிறிய அளவில் இடம்பெறுவதால், மாணவர்கள் சைகைகளைத் தெளிவாகப் பார்ப்பதிலும் புரிந்துகொள்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, சைகைமொழி மொழிபெயர்ப்பாளரின் காணொளிப் பகுதியை பெரிய அளவிலும், தெளிவாகவும், மாணவர்கள் எளிதில் பின்பற்றக்கூடிய வகையிலும் காட்சிப்படுத்தும் வகையில் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வடிவமைப்பை மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. QR Code மூலம் சைகைமொழிக் கல்வி – மடிக்கணினி வழங்குதல்

தற்போது செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக செயல்பட்டு வரும் 10 அரசு சிறப்புப் பள்ளிகளில், பாடத்திட்டங்களை சைகைமொழியில் புரிந்துகொள்ளும் வகையில் QR Code மூலம் கல்வி உள்ளடக்கங்களை அணுகுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறோம்.

இந்நிலையில், காது கேளாத மற்றும் வாய்பேசாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் QR Code மூலம் சைகைமொழியில் கல்வி உள்ளடக்கங்களை எளிதாக அணுகிப் பயில்வதற்கு, அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான Laptop கணினிகளை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் காது கேளாத மற்றும் வாய்பேசாத சைகைமொழி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி, திறன் மேம்பாடு, உயர்கல்வி வாய்ப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கை முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு முன்வைக்கப்படுகின்றன.

எனவே, மாணவர்களின் நலன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, தேவையான அரசாணைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, காது கேளாத மற்றும் வாய்பேசாத மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உரிய ஆதரவை வழங்கிடுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.