"ஒரு கோடி விதைப்பந்துகள்" திட்டத்தின் கீழ், விதைப்பந்து வித்தகர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் கல்வி நிறுவனங்கள் மற்றும் காவல் துறையினரை ஒருங்கிணைத்து இப் பணியைச் செய்து வருகிறார். தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய தென்மாவட்டங்களில் மலைப்பகுதிகள், கிராமச் சாலைகள், குளக்கரை, தரிசு நிலங்கள் மற்றும் நெடுஞ்சாலை யோரங்களில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 62 லட்சம் விதைப்பந்துகள் வீசப்பட்டுள்ளன.
இவ்விதைப்பந்துகளின் முளைப்புத் திறன் குறித்து நடத்தப்பட்ட சர்வே விவரங்களை வெளியிட்டு பூ. திருமாறன் தெரிவித்ததாவது: "மாணவர்கள் அரும்பாடுபட்டுச் செய்து வீசிய விதைப்பந்துகளில் 70 சதவீத விதைகள் வெற்றிகரமாக முளைத்து மரக்கன்றுகளாகக் காட்சி தருகின்றன. குறிப்பாக, மர விதைகளில் வேம்பு மற்றும் புளி ஆகிய விதைகள் 100 சதவீதம் பொய்க்காமல் முளைக்கின்றன.
ஒரு விதைப்பந்தில் தொலைநோக்குப் பார்வையுடன் 5 மர விதைகள் வைக்கப்படுகின்றன. அதில் ஒரு விதை மரமானாலும் கூட நமது முயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய லாபமாகும். உலகப் பணக்காரர்களாலோ அல்லது சர்வ வல்லமை படைத்தவர்களாலோ தனி நபராகச் செய்ய முடியாத மரக்கன்றுகள் நடும் பணியை, மாணவர்களால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்" எனக் குறிப்பிட்டார்.
திருச்சி போலீஸ் பட்டாலியன் எஸ்பி கார்த்திகேயன் விதைப்பந்து சர்வே குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும், வரவிருக்கும் 2026 அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இவ் விழிப்புணர்வுப் பணி மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகளைத் தொடர்ந்து தற்போது பல்கலைக்கழகங்களும் பொறியியல் கல்லூரிகளும் இக் களப்பணியில் இறங்கியுள்ளன. லட்சக்கணக்கில் விதைப்பந்துகளை உருவாக்கிய மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், கல்வி நிலையத்திற்கு விதைப்பந்து தயாரிப்பு யுக்திகளுடன் திருமாறன் வரவுக்கு 801224 1223 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று தெரிவித்தார்.

