ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கான நிதியில் மோசடி செய்த விவகாரத்தில், "மாணவர்கள் பணத்தில் ஊழல் செய்வதற்குப் பதிலாகப் பிச்சை எடுக்கலாம்; அப்பணத்தைச் சுரண்டித்தான் அதிகாரிகள் வாழ வேண்டுமா?" என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் கண்டனமும் காட்டமும் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் பாதரக்குடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில்: "சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்காக 2017 முதல் 2023 வரை அரசு ஒதுக்கிய ரூ.2 கோடியே 35 லட்சம் நிதியை, மாணவர்களின் கணக்கில் செலுத்தாமல் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மோசடி செய்துள்ளனர்.
இதில் தொடர்புடைய சிலர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்; சிலர் பணி ஓய்வு பெறவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நிலுவையில் உள்ள இவ்வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்"* எனக் கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் கே. கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, "இவ்வழக்கில் ஒரு துணை ஆட்சியர், சில வட்டாட்சியர்கள் உட்பட 12 பேருக்கு எதிராகக் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விசாரணை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை" எனக் கூறினார்.
அரசு தரப்பு விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள் தெரிவித்ததாவது: "சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகே தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கும் பணத்தில் ஊழல் செய்வதற்குப் பதிலாக பிச்சை எடுக்கலாம். அப்பணத்தைச் சுரண்டித்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாழ வேண்டுமா?
குற்றம் செய்தவர்களைப் பாதுகாக்க மக்களின் வரிப் பணத்தில் அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடுகிறீர்கள். ஆட்சி மாறினாலும் அரசு அதிகாரிகளின் மனநிலை மாறுவதில்லை; 99 சதவீத அதிகாரிகள் ஊழல் செய்யக்கூடியவர்களே. படித்து முடித்தவுடன் எந்தத் துறையில் வேலை பார்த்தால் லஞ்சம் சம்பாதிக்க முடியும் என்ற மனநிலைதான் சமூகத்தில் நிலவுகிறது. பணம் கொடுத்து வேலைக்கு வருபவர்கள் ஊழலில்தான் ஈடுபடுவார்கள்"* எனக் காட்டமாகத் தெரிவித்தனர்.
தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் அனைத்து அரசுத் துறைகளிலும் குற்றச்சாட்டு தொடர்பாக எத்தனை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன, அது தொடர்பான மேல்முறையீடு மற்றும் விசாரணை நிலுவை விவரங்களை 4 வாரங்களில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்க ஒத்திவைத்தனர்.

