'ராக்கி', 'சாணிக்காயிதம்' படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் ரத்தமும் வன்முறையும் நிறைந்த தனித்துவமான திரை மொழியை வெளிப்படுத்தியவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். தற்போது முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜை முதன்மைப் பாத்திரத்தில் வைத்து அவர் இயக்கியுள்ள ‘டிசி’ (DC) திரைப்படம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதைக் காணலாம்.

கதைக் களம்: காவல்துறைக்குச் சொந்தமான ஆயுதங்களைத் திருடுவதுடன், ஓர் அதிகாரியையும் கொலை செய்கிறார் தாஸ் (லோகேஷ் கனகராஜ்). காவல் ஆய்வாளர் போஜராஜ் (கிரிஷ் தயாள்) மற்றும் அவரது குழுவிடமிருந்து தப்பிக்க, தாஸும் அவரது கூட்டாளிகளும் சென்னையில் உள்ள ஒரு விடுதியில் பதுங்குகின்றனர்.

அங்கு பார்வதியை (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) சந்திக்கும் தாஸுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. மற்றொருபுறம், பாலியல் தொழிலாளியான சந்திராவின் (வாமிகா கபி) கதையும் இணைகிறது.

சரத் சந்திர சட்டோபாத்யாய எழுதிய புகழ்பெற்ற ‘தேவதாஸ்’ கதையைத் தழுவித் தனது பாணியில் உருவாக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன். “தேவதாஸ் ஒரு குற்றப் பின்னணி கொண்ட மனிதனாக இருந்து, அவனது வாழ்க்கையில் பார்வதி இல்லாமல் மற்றொரு பெண் நுழைந்தால் என்னவாகும்?” என்ற கேள்விகளுக்கான பதில்களை நோக்கி நகர்கிறது 'டிசி' (தேவதாஸ் - சந்திரா).

நிறைகள்:

அனிருத்தின் பின்னணி இசை: படத்தின் மிகப்பெரிய பலமே அனிருத்தின் அட்டகாசமான இசைதான். சமீப காலத்தில் அனிருத் கொடுத்த சிறந்த இசைப் படைப்புகளில் இதற்கே முதலிடம். சாதாரண பழிவாங்கும் கதையைத் தனது இசையால் திரையரங்க அனுபவமாக உயர்த்தியுள்ளார்.

நடிகர் லோகேஷ் கனகராஜ்: நடிகராக அறிமுகமாகியுள்ள லோகேஷ் கனகராஜ், முரட்டுத்தனமான தாஸ் கதாபாத்திரத்திற்கு நம்பகமான நடிப்பைத் தந்துள்ளார்.

வாமிகா கபியின் மாஸ் நடிப்பு: கோபக்கார பெண்ணாக வரும் வாமிகா கபிக்கு இது கரியரில் முக்கியமான படம். அவர் துப்பாக்கியை ஏந்தும் காட்சி திரையரங்கை அதிர வைக்கிறது.

தொழில்நுட்பத் தரம்: முகேஷின் ஒளிப்பதிவு, ஜி.கே. பிரசன்னாவின் படத்தொகுப்பு மற்றும் ஸ்டண்ட் குழுவின் உழைப்பு சர்வதேச தரத்தில் உள்ளது. குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய ஆக்ஷன் காட்சி அற்புதம்.

குறைகள்

இரண்டாம் பாதித் தொய்வு: முதல் பாதியில் இருந்த சுவாரசியமும் ஈர்ப்பும் இரண்டாம் பாதியில் குறைந்து, வன்முறை மட்டுமே பிரதானமாகிச் சலிப்பை ஏற்படுத்துகிறது.

செயற்கையான வசனங்கள்: உணர்வுபூர்வமாக ஆழமாக இருக்க வேண்டிய சில இடங்களில் வசனங்கள் செயற்கையாகவும், இயல்பற்றதாகவும் அமைகின்றன.

லோகேஷின் தடுமாற்றம்: கோபம், துக்கம் போன்ற தீவிர உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சில காட்சிகளில் லோகேஷ் கனகராஜின் நடிப்பு சற்றுத் தடுமாறுகிறது.

நிறைவாக:

அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களைக் காட்டிலும் இதில் மனித உணர்வுகள் அலசப்பட்ட விதம் ஆழமானது. இரண்டாம் பாதியின் திரைக்கதை ஒழுங்கில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும், அனிருத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகத் தாராளமாகக் திரையரங்கிற்குச் சென்று 'டிசி' பார்க்கலம்!