கன்னியாகுமரி மாவட்டம் கீழப்பெருவிளையில் அமைந்துள்ள குழந்தைகள் மையத்தில் நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள், மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, கேஸ் அடுப்பு மற்றும் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இன்று காலை வழக்கம்போல் மையத்தைத் திறக்க ஊழியர்கள் வந்தபோது, கதவு உடைக்கப்பட்டுப் பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள், அக்கம் பக்கத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும், சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள், அங்குப் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் முக்கியத் தடயங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குழந்தைகள் மையத்தில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

