குமரி மாவட்டத்தில் ஏ.ஐ. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கடந்த 10 நாட்களில் மட்டும் 10,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களைக் குறைக்கும் வகையில் எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது ஏ.ஐ. கேமராக்கள் மூலம் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. சப்-கலெக்டர் அலுவலக சந்திப்பு, வடசேரி, ஆல்பர்ட் மேரி தியேட்டர் சந்திப்பு, செட்டிக்குளம், சுசீந்திரம் சந்திப்பு, திருவாடானை, அழகிய மண்டபம், தக்கலை சந்திப்பு, அருமனை, மார்த்தாண்டம் சந்திப்பு ஆகிய 11 இடங்களில் ஏ.ஐ. கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. கேமரா மூலம் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் படம் பிடிக்கப்பட்டு நாள்தோறும் 400 முதல் 500 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 129-ன் படி ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டும். பிரிவு 194 4-ன் படி ஹெல்மெட் இல்லையெனில் ₹1,000 அபராதமும், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் அபாயமும் உள்ளது.

2 பேருக்கும் ஹெல்மெட் கட்டாயமா?

குமரி மாவட்டத்தில் ஓட்டுநர்களுக்கு ஹெல்மெட் அவசியமாக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2-வது நபருக்கு ஹெல்மெட் என்பது அவசியம்தான் என்றாலும், ஆரம்பத்தில் 100% விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டுப் பின்னரே முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரை இயங்காவிட்டாலும் கேமரா இயங்கும்!

சில இடங்களில் ஏ.ஐ. கேமராக்களின் கீழ் உள்ள டிஜிட்டல் திரையில் விவரங்கள் தெரியவில்லை என்பதால் கேமரா இயங்கவில்லை என வாகன ஓட்டிகள் நினைக்க வேண்டாம். திரை இயங்காவிட்டாலும் கேமரா தானாகவே விதிமீறலைப் படம் பிடித்துக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி அபராதம் விதிக்கும் எனப் போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

குறைந்தபட்சமாக ₹1,000 அபராதம் விதிக்கப்படுவதால், கடந்த 10 நாட்களில் மட்டும் குமரி மாவட்டத்தில் ₹10 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.