குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் உலகப் புகழ்பெற்ற திருவிழாவாகும். இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்த படியாக இங்குதான் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் காளி, சிவன், ராஜா, குறத்தி போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து விரதம் மேற்கொண்டு காணிக்கை சேகரித்து இறுதி நாளில் அந்த காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்துவார்கள். இந்த விழாவின் பத்தாம் நாள் தசரா அன்று கடற்கரையில் மகிஷாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.

தசரா திருவிழாவின் தொடக்கமாக, இன்று காலை கோவில் தங்கக் கொடிமரத்திற்குப் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்கக் கொடியேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோவிலுக்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது கரங்களில் 'காப்பு' கட்டி, காளி, முருகன், சிவன், விநாயகர் மற்றும் பல்வேறு சுவாமி வேடங்களை அணிவதற்காகத் தங்களது விரதத்தைத் தொடங்கினர். தசரா குழுக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர் ஊராகச் சென்று அம்மன் புகழ்பாடும் பாடல்களைப் பாடித் தர்மசேகரம் செய்யும் நிகழ்வும் இதன் மூலம் தொடங்கியது.

திருவிழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரை அம்மன் மற்றும் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேலும், இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 20-ம் தேதி நள்ளிரவில் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 21-ம் தேதி கடற்கரை மேடை மற்றும் சிதம்பரேஸ்வரர் கோயில் பகுதிகளில் எழுந்தருளும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

காலை 6 மணிக்குத் தேரில் முக்கிய வீதிகளில் பவனி வரும் அம்மன், மாலையில் கோயிலை வந்தடைந்ததும் கொடியிறக்கம் செய்யப்பட்டு, பக்தர்களுக்குக் காப்பு களையப்படும். நள்ளிரவு 12 மணிக்குச் சேர்க்கை அபிஷேகத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் எந்தவித இடையூறுமின்றி தரிசனம் செய்யவும், பாதுகாப்பாக வந்து செல்லவும் சிறப்புப் பேருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன.