தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு மின் கட்டணம் வழக்கத்தைக் காட்டிலும் இருமடங்கு உயர்ந்துள்ளதாகத் திரைப்பட நடிகை வைஷாலி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் இலவசம் என்றும், 500 யூனிட்டுகளைத் தாண்டுபவர்களுக்கு முதல் 100 யூனிட் மட்டுமே இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் சாமானிய மக்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் இருமடங்கு மின் கட்டணம் வந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை வைஷாலி தெரிவித்ததாவது: "கடந்த 2, 3 மாதங்களாக சாமானிய மக்களுக்கு மின் கட்டணம் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. 200 யூனிட் இலவசம் என்று சொன்ன வாக்குறுதி நடைமுறையில் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை."

எனவே, 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற திட்டத்தைத் திரும்பப் பெற்றுவிட்டு, இதற்கு முன்னதாக எவ்வளவு மின் கட்டணம் வந்ததோ அதேபோன்று மீண்டும் வழங்கினால் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இப்படியே நிலைமை நீடித்தால் தவெக அரசு மீதான மக்களின் நம்பிக்கை முற்றிலும் குறைந்துவிடும்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பு வந்தபோது அதை வரவேற்றுப் பேசிய நடிகை வைஷாலி, தற்போது அதற்கு எதிராகப் பேசியுள்ள புதிய வீடியோவையும் பழைய வீடியோவையும் இணைத்து நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.