சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.

அப்போது வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: கொளத்தூர் தொகுதியில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் (VVPAT) சீட்டுகளையும் மீண்டும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும்.

த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்க வேண்டும். கொளத்தூர் தொகுதியில் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனச் தலைமை நீதிபதி ஸ்ரீராம் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் முறையிட்டார்.

இம்முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அன்று எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.