கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில், ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தில் மாணவிகள் வண்ணமயமான கோலமிட்டுத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சொர்ணா நர்சிங் கல்லூரியில், கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சொர்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தில் மாணவிகள் வண்ணமயமான அத்தப்பூ கோலமிட்டுத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

சாதி, மத வேறுபாடின்றி 10 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க ஓணம் திருநாளை முன்னிட்டு, மாணவிகள் பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் இதழ்களைக் கொண்டு வட்ட வடிவ அத்தப்பூ கோலங்களை வரைந்தனர். அத்தப்பூ கோலத்துடன், மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று விழாவைச் சிறப்பித்தன.

விழாவிற்குச் சொர்ணா நர்சிங் கல்லூரித் தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன், முத்துச்செல்வம் மற்றும் சமூகத் தணிக்கை மாவட்ட வள அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அத்தப்பூ கோலம் வரைந்த மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாரியப்பன், நடராஜன், கிருஷ்ணசாமி, சமூகத் தணிக்கை வட்டார வள அலுவலர் கருப்பசாமி, கல்லூரி ஆசிரியர்கள் சென்மதி, பூபதி, மகேஸ்வரி, பாண்டீஸ்வரி, செல்வகுமாரி, அருள் முருகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நிறைவாக, கல்லூரி ஆசிரியை தேவி நன்றி கூறினார்.