தூத்துக்குடியில் பெருமாள் கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 1-வது தெருவில் பத்ரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு எதிரே, அதற்குப் பாத்தியப்பட்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள கிரில் கேட் அருகே சிறிய அளவிலான உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு வந்த மர்ம நபர்கள் இருவர், கிரில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், உள்பகுதியில் இருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த சுமார் ரூ.10,000 பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று காலை வழக்கம்போலக் கோவிலைத் திறப்பதற்காக வந்த பூசாரி, கேட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்துத் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். கோவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரு வாலிபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய இரு வாலிபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடைபெற்ற இந்தத் துணிச்சல் திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.