சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதாகியுள்ள கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான வழக்கை, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுச் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இப் பாலியல் வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ராஜசேகரன், வாராகி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அம்மனுக்களில், "வீரமணியுடன் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் உடனிருப்பது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. அரசியல் பின்னணி கொண்ட இவ்வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இதன் விசாரணையைச் சுதந்திரமான அமைப்பான சி.பி.ஐ. அல்லது எஸ்.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இம் மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லஷ்மி நாராயணன் தெரிவித்ததாவது: "சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுச் சில நாட்களே ஆன நிலையில், அதற்குள் இவ்வழக்கை ஏன் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்? சி.பி.ஐ.க்கு மட்டும் என்ன ஆப்பிரிக்காவிலிருந்தா அதிகாரிகள் வருவார்கள்? அவர்களும் நமது காவல் துறை அதிகாரிகளே. மனுதாரர்களிடம் இவ்வழக்கு தொடர்பான கூடுதல் ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால், அதனை நாளை மாலை 3 மணிக்குள் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகளிடம் நேரில் வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, வீரமணி மீதான பாலியல் வழக்கைச் சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, இவ்வழக்கின் தற்போதைய விசாரணை அறிக்கையை வரும் அக்டோபர் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யச் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (SIT) உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

