மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் குப்பை மலை சரிந்து குடியிருப்புகள் மீது விழுந்ததில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கினியா நாட்டின் தலைநகர் கொனாக்ரியில் 'டார் எஸ் சலாம்' என்கிற மிகப்பெரிய குப்பைக்கிடங்கு அமைந்துள்ளது. இங்குப் பல லட்சம் டன் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்தன. இந்தக் குப்பைக்கிடங்கு அதனைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.
இதனால் குப்பைக்கிடங்கை மூடி, குப்பைகளை வேறு இடத்திற்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் அந்த மிகப்பெரிய குப்பைக்கிடங்கு மூடப்பட இருந்தது. இந்தச் சூழலில், கொனாக்ரியில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாகக் குப்பைக்கிடங்கில் இருந்த குப்பை மலை திடீரெனச் சரிந்து விழுந்தது.
அதிகாலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த விபத்தால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் தூக்கத்திலேயே குப்பை இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

