தெலுங்கானாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரக் கிணற்றில் பாய்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் பாலவந்தபூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சித்திப்பேட்டையில் நடைபெற்ற உறவினர் வீட்டுச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு நேற்று மாலை காரில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அப்பனப்பள்ளி புறநகர்ப் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த சுமார் 22 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரத்தில், நீர் நிறைந்திருந்த கிணற்றுக்குள் கார் மூழ்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிர மீட்புப் பணிகளுக்குப் பிறகு, இன்று அதிகாலை வேளையில் கார் கிணற்றிலிருந்து வெளியே மீட்கப்பட்டது. காருக்குள் இருந்த தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் என 4பேரும் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இத்துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

