தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக் கூடத்திற்கான கட்டடப் பணிகளையும், அதே ஊராட்சி பகுதியில் விண்ணரசி மருத்துவமனை முதல் காமநாயக்கன்பட்டி பை-பாஸ் வரை முடிவுற்ற பேவர் பிளாக் சாலை பணிகளையும்,

திருமலாபுரம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.52.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக் கூடத்திற்கான கட்டடப் பணிகளையும், அகிலாண்டபுரம் ஊராட்சியில் கனிமம் மற்றும் சுரங்க நிதியிலிருந்து ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி கிணறு அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,

அதே ஊராட்சியில் வளரும் பாரதம் - கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதித் திட்டத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புது குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், சாலைபுதூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைகடைக்கான கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும்,

வெள்ளாளங்கோட்டை ஊராட்சியில் கனிம மற்றும் சுரங்க நிதியிலிருந்து ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக திருமலாபுரம் கிராமத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 அலுவலக பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று பணிகள் மேற்கொண்டதை மாவட்ட ஆட்சியர் மேலாய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.சரவணன், செயற்பொறியாளர் இளஞ்சேரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.