நடிப்பு: கவின், நயன்தாரா, பாக்யராஜ், ராதிகா, பிரபு, கதிர், குரேஷி மற்றும் பலர்
இயக்கம்: விஷ்ணு எடவன்
இசையமைப்பாளர்: ஜென் மார்ட்டின்
ஒளிப்பதிவு: ராஜேஷ் சுக்லா
எழுதியவர்: சல்மான்
கதைக்களம்: தொடர்ச்சியான காதல் நிராகரிப்புகளால் பாதிக்கப்பட்டு, பெற்றோர் (பாக்யராஜ் - ராதிகா) ஏற்பாடு செய்யும் திருமணத்திற்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வருகிறார் நாயகன் மயில்சாமி (கவின்).
மறுபுறம், தாயால் கைவிடப்பட்டு, குடிப்பழக்கத்திற்கு ஆளான தந்தையின் (பிரபு) பராமரிப்பில் வளரும் தேவயானி (நயன்தாரா), தன் சம்மதமின்றி ஏற்பாடு செய்யப்படும் திருமணத்திலிருந்து தப்பித்துச் சென்னை வருகிறார். வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் வீட்டை விட்டு வெளியேறும் இவர்கள் இருவரும் தற்செயலாகச் சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பும், இருவருக்கும் இடையேயான வேறுபாடுகளும் கதையை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்கிறது என்பதே 'ஹாய்' திரைப்படத்தின் கதைக்களம்.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் திரைக்கதையை மிகத் தெளிவாகக் கையாண்டுள்ளார். வேகம், நிதானம் மற்றும் நிறுத்தங்களை உணர்ந்து ஒரு தேர்ந்த ஓட்டுநரைப் போலக் கதையை நகர்த்தியுள்ளார்.
முதல் பாதியில் சென்னை பின்னணியில் ஹாலிவுட் ரோம்-காம் (Rom-Com) பாணியில் கியூட்டாகவும் 'கிரிஞ்ச்' இல்லாமலும் நகரும் கதை, இரண்டாம் பாதியில் கோயம்புத்தூருக்கு நகர்ந்து குடும்பம், நகைச்சுவை மற்றும் கலாட்டாக்கள் நிறைந்த ஒரு தமிழ் ரோம்-காம் படமாக மாறுகிறது.
கவின்: ஒவ்வொரு படத்திலும் தனது உடல்மொழியிலும் நடிப்பிலும் மெருகேறி வரும் கவின், இதில் உணர்வுபூர்வமான காட்சிகளில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நயன்தாரா: வழக்கமான கதைகளிலிருந்து விலகி ஒரு ஃப்ரெஷ்ஷான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிராமத்துப் பெண்ணாக ஆரம்பத்தில் சற்றே விலகல் தந்தாலும், போகப் போகத் தனது நடிப்பால் ஈர்க்கிறார். கவின் - நயன்தாரா இடையிலான இயல்பான கெமிஸ்ட்ரி படத்திற்குப் பெரும் பலம்.
பாக்யராஜ், ராதிகா, பிரபு ஆகியோர் தங்கள் அனுபவமிக்க நடிப்பால் இரண்டாம் பாதியில் கதையின் சுவாரசியத்தைத் தக்கவைக்கின்றனர். ஆதித்யா டிவி கதிர், விஜய் டிவி குரேஷி ஆகியோர் நகைச்சுவையில் தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்துள்ளனர்.
ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவு காட்சிக்கு எழில் சேர்க்கிறது. ஜென் மார்ட்டினின் பின்னணி இசை படத்திற்குப் பலமாக அமைந்தாலும், பாடல்கள் மனதில் பெரிய அளவில் ஒட்டவில்லை.
நிறை குறைகள்:
நிறை: முதல் பாதியில் இயல்பான உரையாடல்கள், இரண்டாம் பாதியில் க்ளைமாக்ஸுக்கு முன் வரும் ராதிகா தொடர்பான காட்சிகள் மனதை நெகிழ வைக்கின்றன.
குறை: கதையின் பல காட்சிகளை (உதாரணமாக நயன்தாராவின் அம்மாவைக் கவின் தேடிச் செல்வது) பார்வையாளர்களால் எளிதில் யூகித்து விட முடிகிறது. சில இடங்களில் லாஜிக் மீறல்கள் (பாக்யராஜ் ரூ.57 லட்சம் கொடுப்பது போல) தென்படுகின்றன.
பயத்தின் காரணமாகத் தன் ஆசைகளை தியாகம் செய்யாமல், காதல் தன் பாதையைத் தானே கண்டடையும் என்பதை உணர்வுபூர்வமாக உணர்த்தியதில் இப்படம் வெற்றி பெறுகிறது. கவின் - நயன்தாராவின் இந்த ‘ஹாய்’ பார்வையாளர்களின் மனதை நெகிழ வைக்கும் ஓர் அழகான அனுபவம்.

